About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs April 2016 (Tamil)

 CURRENT AFFAIRS APRIL 2016 FOR TNPSC AND OTHER COMPETITIVE EXAMS
நடப்பு  நிகழ்வுகள்: உலகம்
இந்தியா -  ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே ஒப்பந்தம்
  • பெண்கள், குழந்தைகள் மற்றும்  ஆள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது, இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  


இந்தியா - வங்கதேசம் ஒப்பந்தம்
  • மீன்வளம் மற்றும் வேளாண் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த 2011-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.              
             www.tnpsclink.in
  • அந்த ஒப்பந்த காலம் தற்போது நிறைவடையவுள்ள நிலையில், அதனை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உய்குர்-சீன தலைவர் டோல்குன்-க்கு  விசா ரத்து
  • சீனாவால் தேடப்படும் குற்றவாளி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர்- சீன கூட்டமைப்புத் தலைவர் டோல்குன் இசா ஆவார்.


  • இவர் இந்தியாவில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி  எலக்ட்ரானிக் டூரிஸ்ட் விசா முறை மூலம் விண்ணப்பித்திருக்கிறார். அவரது விசா விண்ணப்பத்துக்கான காரணம் ஏற்புடையதல்ல. அதன் காரணமாக அவர் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.


  • தர்மசாலாவில்  சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியில் உள்ள டோல்குன் இசா, தனக்கு விசா வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ஏப்ரல் 6, 2016-ல் விசா வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 23, 2016-ல் விசா ரத்து செய்யப்பட்டது
பத்திரிகை சுதந்திர தரநிலையில்  இந்தியாவுக்கு 133-வது இடம்
  • 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிகை சுதந்திரம் தரவரிசைப் பட்டியலை RSF (எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு) வெளியிட்டுள்ளது. 180 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தில் இருக்கிறது.  


  • இந்த தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது, 3-வது இடங்களை முறையே நெதர்லாந்து, நார்வே நாடுகள் பிடித்துள்ளன.


வங்கதேசத்தில் இதழாசிரியர் படுகொலை
  • வங்கதேசத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த இதழாசிரியர் ஜுல்ஹாஷ் மன்னான் மற்றும் அவரது நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர்.  
  • தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை நிகழ்ந்த படுகொலைகளுக்கு அல்-காய்தா பொறுப்பேற்றது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி "ரூப்பான்' என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: 175 நாடுகளுடன் இந்தியா கையெழுத்து
  • பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா உள்பட 175 நாடுகள்  கையெழுத்திட்டன. 23.04.2016, சனிக்கிழமை புவி தினத்தையொட்டி, நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பொதுச்சபையில் சனிக்கிழமை பிரம்மாண்ட விழா நடைபெற்றது.


  • ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் முன்னிலையில் நடைபெற்ற அந்த விழாவில், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கையெழுத்திட்டார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகின் மிகப் பிரபல கடிகாரமான  BiG Ben கடிகாரம் பழுது பார்க்கும் பணி
  • கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனின் அடையாளமாக இருந்து வருகிறது பிக்பென் கடிகாரம். பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கோபுர கடிகாரம் 1859-இல் அமைக்கப்பட்டது.


  • கடிகாரத்தை அடைய கோபுரத்துக்குள் தற்போது 334 படிகள் உள்ளன. கடிகாரம் அமைந்துள்ள எலிஸபெத் கோபுரத்தின் உயரம் 315 அடி.  உலகின் மிகப் பிரபல கடிகாரமான "பிக்பென்'னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
  • இதற்கு 2.9 கோடி பவுண்டு (சுமார் ரூ. 290 கோடி) செலவாகும் என அரசு தெரிவித்தது. பிக் பென் கடிகாரமும் அது அமைக்கப்பட்டுள்ள எலிஸபெத் கோபுரமும் முற்றிலும் பழுது பார்க்கப்படும். 1976-இல் நடைபெற்ற பழுது பார்க்கும் பணியின்போது 26 நாட்களுக்கு கடிகாரம் நிறுத்தப்பட்டது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் (Equator) தொடரும் நில அதிர்வுகள்
  • சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உள்ளான தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.


  • அந்நாட்டில் கடந்த 16.04.2016, சனிக்கிழமை,  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து 700 பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இவற்றில் சில, ரிக்டர் அளவுகோலில் 4.0 முதல் 6.0 அலகுகளாகப் பதிவாகின. நிலநடுக்கம் என்று கூறும் அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக இவை உணரப்பட்டன.
  • நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 602-ஆக அதிகரித்தது. மேலும் 130 பேரைக் காணவில்லை. காயமடைந்தவர்கள எண்ணிக்கை 12,492 ஆக உள்ளது. 26,000 பேர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். ஏழாயிரம் கட்டடங்கள் முற்றிலும் தகர்ந்தன. மேலும் 2,700 கட்டடங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.
இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கை
  • இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் பல்வேறு போர்க்குற்றங்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மைத்ரிபாலா சிறீசேனா அதிபரானார். இதனைத் தொடர்ந்து, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இந்தச் சூழலில், இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா அண்மையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.


  • இருந்தபோதிலும், சித்ரவதை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலைமை இன்னும் சீரடையவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளன. மனித உரிமையைப் பாதுகாப்பதில் இலங்கை அரசு இனி தீவிர கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.


  • போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும், மனித உரிமைகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கு உதவியாக பிரிட்டன் பிரதமர் ரூ.62 கோடி அளிப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தக தினம்
  • ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தக தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


  • 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல ஸ்பானிஷ் எழுத்தாளர் செர்வான்டஸ் நினைவு தினத்தை உலகப் புத்தக தினமாகக் கடைப்பிடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஐ.நா.வின் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஏற்று, 1995-ஆம் ஆண்டு முதல் இது பின்பற்றப்படுகிறது.


  • நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினமும் ஏப். 23 கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை
  • இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற 19-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜிச்சி ஆகியோர் பங்கேற்றனர்.
  • அப்போது, எல்லை விவகாரம் மட்டுமின்றி பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். 14 எல்லை நாடுகளில், 12 நாடுகளுடான எல்லைப் பிரச்னைகளுக்கு சீனா முழுமையான தீர்வை கண்டுள்ளது. இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளுடான எல்லைப் பிரச்னைகளுக்கு மட்டுமே இன்னும் தீர்வு காண வேண்டியுள்ளது.
  • ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக, ஐ.நா.வில் நடவடிக்கை எடுக்க இந்தியா அண்மையில் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. இந்த விவகாரத்தில், இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், மேற்கண்ட பேச்சுவார்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அமெரிக்கா இடையே வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு
  • வரி ஏய்ப்பு தடுப்பு, பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி செல்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் ஒத்துழைக்க இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன.


  • மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி  6-ஆவது அமெரிக்க-இந்திய பொருளாதார, நிதித் துறை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அமெரிக்கா சார்பில் அந்நாட்டு நிதியமைச்சர் ஜேக்கப்  உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  • அப்போது, வரி ஏய்ப்புத் தடுப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தவிர இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தேசிய முதலீடு, உள்கட்டமைப்பு நிதியத்துக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் அமெரிக்கா சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
ஃபுகுஷிமா அணு உலையில் தொடர்ந்து வெளியேறும் கதிர்வீச்சு நீர்
  • கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய மாபெரும் சுனாமி, அந்த நாட்டின் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்துக்குள் புகுந்தது. இதனால் அந்த மின் நிலைய அணு உலைகளைக் குளிர்விக்கும் சாதனங்கள் செயலிழந்ததால் அந்த உலைகள் உருகி அணுக் கதிர்வீச்சு மாசுபாட்டை பரவச் செய்தன.
  • அதனைத் தொடர்ந்து, அணு மின் நிலையத்தைச் சுற்றிலும் வசித்த சுமார் 2 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த விபத்தின் பின் விளைவுகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
  • 1986-ஆம் ஆண்டு ரஷியாவின் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு, மிக மோசமான அணு உலை விபத்து இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விபத்து நிகழ்ந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னமும் ஃபுகுஷிமா அணு உலைகளைக் குளிர்விக்க ஏரளமான நீர் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சுக் கழிவு நீரால் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஐ.நா. பல்கலைக்கழக கவுன்சிலுக்கு இந்தியப் பெண் உட்பட 12 பேர் நியமனம்
  • பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பது, அதன் செயல்பாடுகளை நிர்வகிப்பது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தயாராகும் பட்ஜெட், பணி திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஐ.நா. பல்கலைக்கழக கவுன்சில்.
  • டெல்லியைச் சேர்ந்த சிந்தனையாளர் அமைப்பான, டெல்லி கொள்கைக் குழுவின் இயக்குநரும் கல்வியாளருமான ராதா குமார் (63) உட்பட 12 பேர் இந்தக் கவுன்சிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் பதவியேற்றுக் கொள்வார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது நாட்டு அரசு பிரதிநிதிகளாக அல்லாமல், தனித்திறமையைப் பயன்படுத்தி பணிபுரிவார்கள்.
அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் Founders Award விருது
  • உலக அளவில் இருக்கும் ஆசிய சமூக மக்களின் சாதனைகளை கெளரவிப்பதற்காக வழங்கப்படும் பிரிட்டனின் உயரிய நிறுவனர் விருது (ஃபவுண்டர்ஸ் அவார்ட்), மறைந்த அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.


  • லண்டனில்,  நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக, தெரசாவின் உறவினர்களில் தற்போது உயிருடன் இருக்கும் அவரது 72 வயது மருமகள் அகி போஜாஸியு, இத்தாலியில் இருந்து வந்திருந்தார். கத்தோலிக்க மத கன்னியாஸ்திரியான தெரசா, கொல்கத்தாவில் "மிஷினரி ஆஃப் சாரிடீஸ்' என்ற தொண்டு அமைப்பைத் தொடக்கி, அந்நகரில் வசிக்கும் நலிந்த பிரிவினருக்கும், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் சேவை செய்து வந்தார். அவர் கடந்த 1997ஆம் ஆண்டு தனது 87ஆவது வயதில் காலமானார்.
  • பிரிட்டனில் இருந்து 6 ஆவது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகள், வணிகம், தொண்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சாதனைகளைப் புரிந்த ஆசியர்களுக்காக வழங்கப்படுகின்றன. லெமன் குழும அதிபர் பால் சாகூ, இந்த விருதுகளை கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவினார். .
இலங்கையில் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கம்
  • இலங்கையில் அதிபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க, அந்த நாட்டு நாடாளுமன்றம் அரசியல் சாசன வரைவு நாடாளுமன்றமாக  மாற்றப்பட்டது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அதன் வழிகாட்டுதல் குழுவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கிறார்.
  • தற்போதைய நாடாளுமன்றத்தை அரசியல் சாசன வரைவு மன்றமாக மாற்றும் தீர்மானம் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை வரலாற்றில் இரண்டாவது முறையாக கூட்டப்படும் அரசியல் சாசன வரைவு நாடாளுமன்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



நடப்பு  நிகழ்வுகள்: இந்தியா
2017 முதல் அனைத்து செல்பேசிகளுக்கும் 'பேனிக் பட்டன்' (Panic Button)  கட்டாயம்
  • இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் விற்பனையாக உள்ள மொபைல்போன்கள் அனைத்தி லும் அவசரகால அழைப்பு பொத் தான் வசதி (Panic Button) அறிமுகப் படுத்தப்படும். .


  • 2018-ம் ஆண்டிலிருந்து விற்பனைக்கு வர உள்ள செல்போன்கள் அனைத்திலும் செல்போன் உபயோகிப் பாளர் எந்த இடத்தில் இருக்கி றார் என்பதைக் காட்டும் GPS வரைபட வசதியுடன் வெளியா கும். இத்தகவலை தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
  • அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் இது தொடர்பான வசதிகளை உருவாக்கித் தர மொபைல்போன் விதி 2016-ல் திருத்தம் செய்யப்படும் என்று, பெண்கள் பாதுகாப்பு குறித்து மகளிர் மற்றும் குழந்தை மேம் பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கடந்த டிசம்பரில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி புதிய விதிமுறை ஏப்ரல் 22, 2016-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் 5 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
  • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் முதல் பகுதியை வரும் மே 1, 2016-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பாலியாவில் இருந்தும், 2-ம் பகுதியை மே 15, 2016-ல் குஜராத்தின் தாஹோத்தில் இருந்தும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
  • மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வசதி படைத்தவர்கள் விட்டுக் கொடுத்திருப்பதன் மூலம் பல ஆயிரம் கோடி அரசுக்கு மிச்சமாகியுள்ளது. அந்த பணத்தை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பிரித்து கொடுக்கும் வகையில் இந்த இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டிலேயே நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு                                 www.tnpsclink.in
  • நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 1, 2016 மற்றும் ஜூலை 24, 2016 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
  • நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
நாடுமுழுவதும் வெப்பத்துக்கு 4,000 பேர் பலி
  • கடந்த 4 ஆண்டுகளில் 4,204 பேர் வெப்பத்துக்கு பலியாகியுள்ளனர். 2013-ல், 1,433 பேர் வெப்பத்துக்கு பலியாயினர். இதில், ஒருங்கிணைந்த ஆந்திராவில் மட்டும் 1,393 பேர் பலியாகினர். 2014-ல் 549 பேரும், 2015-ல் 2,135 பேரும் வெப்பத்துக்கு பலியாயினர்.
  • நடப்பாண்டு மார்ச், 2016  வரை 87 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவில் அதிகபட்சமாக 56 பேரும், ஒடிசாவில் 19 பேரும், ஆந்திராவில் 8 பேரும் பலியாகியுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
நாடுமுழுவதும் 2015-ம் ஆண்டுல் 32 ஆயிரம் பலாத்காரம்
  • தேசிய குற்றப்பதிவு ஆவண தகவலின்படி, 2015-ம் ஆண்டு நாடு முழுவதும் 32 ஆயிரத்து 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1,706 கூட்டு பலாத்காரங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்திய-திபெத்திய (IDBP) எல்லைக் காவல் படை தலைமையகம் இடமாற்றம்
  • இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் (IDBP) வடகிழக்குப் பிராந்திய தலைமையகத்தை, மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் இருந்து அருணாசலப் பிரதேசத் தலைநகர் இட்டா நகருக்கு மாற்றத் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
  • அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதையடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.      
ரயில்வே பாதுகாப்புப் படை(RPF) தலைவராக எஸ்.கே.பகத் நியமனம்
  • ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி எஸ்.கே.பகத் நியமிக்கப்பட்டார். ரயில் பயணிகளையும், ரயில்வே சொத்துகளையும் பாதுகாப்பதை முக்கியப் பணியாகக் கொண்டு RPF செயல்பட்டு வருகிறது.
  • தற்போதைய உத்தரகண்ட் மாநில பிரிவைச் சேர்ந்த 1982-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பகத், இப்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இளைஞர்களின் திறமைகளை அங்கீகரிக்க புதிய சட்டம்
 
  • திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக 500 மையங்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் இளைஞர்களுக்கு 15 நாள்கள் முதல் 30 நாள்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


  • திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் தேசிய திறன் சான்றிதழ் வாரியம் சார்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி பெறும் நோக்கில் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மக்களவையில் திறன் மேம்பாடு மற்றும் நிறுவனங்கள் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, மக்களவையில்  கூறினார்.
 
ISRO 07 வழிகாட்டி செயற்கைகோள்களை (Regional Navigation)  வெற்றிகரமாக செலுத்தி சாதனை
  • அடுத்தடுத்து 07 வழிகாட்டி செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோ விஞ்ஞானிகளின் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள்.


  • ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 28.04.2016-அன்று பி.எஸ்.எல்.வி. சி33 ராக்கெட்(PSLV C-34) மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைகோள் ( IRNSS-1G is the seventh and final satellite in the Indian Regional Navigation Satellite System) வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர்கள் (Laser Wall) செயல்பட தொடங்கின
  • பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பஞ்சாப் மாநிலத்துக்குள்பட்ட இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள "லேசர் சுவர்கள்' (Laser Wall) செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
  • பாகிஸ்தானை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்ட 12 லேசர் சுவர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. லேசர் சுவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால், இவற்றின் மூலம் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எளிதில் கண்காணிக்கலாம்.


  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநிலங்களின் சர்வதேச எல்லைப் பகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் இந்திய-வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு லேசர் சுவர்கள் மற்றும் வேலிகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரளாவில் பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி
  • கேரள மாநிலம், கோட்டயத்தில் தாழத்தங்காடி என்ற இடத்தில் மீனாச்சில் நதிக்கரையில் ஜும்மா மசூதி எனும் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசலில் உள்ளது.


  • இங்கு பெண்கள் வழிபாடு மேற்கொள்ள 24.04.2016, ஞாயிற்றுக்கிழமை  அனுமதி வழங்கப்பட்டது. மசூதியில் வழிபடும் பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்திருக்க வேண்டும் என்றார் நவாப் முல்லாடம்.
இந்திய சுற்றுலாத் துறை மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி ரூ.40,000 கோடி
  • மக்களவையில் 25.04.2016, திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்ததாவது: கடந்த 2014-ஆம் ஆண்டில் 46.57 லட்சம் பயணிகள் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதேபோல், மகாராஷ்டிரத்துக்கு 43.89 லட்சம் பேரும், உத்தரப் பிரதேசத்துக்கு 29.09 லட்சம் பேரும் சுற்றுலா வந்துள்ளனர்.
  • மேலும்  இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.25 கோடி பேராகவும், கடந்த 2013-இல் 1.99 கோடி பேராகவும், கடந்த 2012-ஆம் ஆண்டில் 1.82 கோடி பேராகவும் இருந்தது என்றும் மேலும் கடந்த 3 மாதங்களில், இந்தியாவுக்கு வெளிநாட்டினரின் சுற்றுலாப் பயணம் மூலம் ரூ.40,411 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறினார்.
 
விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டு (Passport) ரத்து
  • வங்கிகளிடம் இருந்து ரூ.9,400 கோடியை கடனாக பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடவுச்சீட்டை (Passport) இந்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.


  • விஜய் மல்லையாவின் பெயர் பிரிட்டன் நாட்டு வாக்காளர் பட்டியலில் தற்போதைய வீட்டு முகவரியுடன் இருப்பதாக "சன்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதை விஜய் மல்லையாவும் உறுதிசெய்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்தே தாம், பிரிட்டன் பிரஜை என்று அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.842 கோடி  மத்திய அரசு  வறட்சி  நிதி
  • தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை கூட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி மத்தியக் குழு அளித்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.
  • இதையடுத்து, கர்நாடகத்துக்கு ரூ.723.23 கோடி நிதியும், புதுச்சேரிக்கு ரூ.35.14 கோடியும், அருணாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.84.33 கோடி நிதியும் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு அளிக்கப்படும் ரூ.84.33 கோடி நிதியில், தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு அளிக்கப்படும் ரூ.18 கோடியும் அடங்கும் என்று அந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.
  • மகாராஷ்டிரம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியும், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களும் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு உயர்த்தும் திட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு
  • விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆராய்ந்து ஆலோசனை நடத்த 8 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • வேளாண்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அசோக் தல்வாய் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறை, உணவுத் துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள், தேசிய வேளாண் பொருளாதார கல்வி நிலையத்தின் ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்
உத்தரகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும்
  • உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.


  • உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பி.எஃப். (Public Provident Fund) புதிய விதிகள் ரத்து, மத்திய அரசு நடவடிக்கை
  • தொழிலாளி ஒருவர் தொடர்ந்து 2 மாதகாலம் தொடர்ந்து பணியில் இல்லையெனில் தனது பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும் பணியில் இருப்பவர்கள் 54 வயதை எட்டினால் பிஎஃப் பணத்தைப் பெற முடியும் என்ற விதியும் இருந்தது.
  • இதனை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி பணியில் இருந்து விடுபட்டு விட்டாலும், பிஎஃப் பணத்தை 58 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட 57 வயதுக்குப் பிறகுதான் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1, 2016-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
  • மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. 5 தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • புதிய விதிகளை திரும்பப் பெறுவதுடன் பிஎஃப் பணத்தில் புதிய சலுகைகளை தொழிலாளர்களுக்கு வழங்கவும் பரிசீலித்து வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது, மத்திய அரசு தகவல்
 
  • உலகில் மிகவும் விலை மதிப்புள்ள வைரங்களில் கோஹினூர் வைரம் முதன்மையானது. 1849-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில பிரிட்டன் கவர்னராக இருந்த டல்ஹெளசி பிரபு, மகாராஜா ரஞ்சித் சிங்கை கட்டாயப்படுத்தி, கோஹினூர் வைரத்தை விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளிக்கச் செய்தார் என்று கூறப்படுகிறது.


  • சுமார் ரூ.1,300 கோடி மதிப்புள்ள கோஹினூர் வைரம் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • 105 கேரட் கோஹினூர் வைரத்தை மகாராஜா ரஞ்சித் சிங் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அளித்தார்.  போரில் உதவிய ஆங்கிலேயர்களுக்கு அன்பளிப்பாக அந்த வைரம் அளிக்கப்பட்டுள்ளது. கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து திருடப்படவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவோ இல்லை, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவர தங்கள் அமைச்சகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்  மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.


தேசிய கலைகள் மைய அறக்கட்டளைக்கு (Indira Gandhi National Centre for the Arts) உறுப்பினர்கள் நியமனம்
  • இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தின் அறக்கட்டளை (Indira Gandhi National Centre for the Arts, New Delhi is a premier government-funded arts organization in India), மத்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகும்.  


  • இதன் புதிய தலைவராக, "ஜனசத்தா' ஹிந்தி நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பிரபல நடனக் கலைஞர் சோனல் மான்சிங், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, ஓவியக் கலைஞர் வாசுதேவ் காமத், மத்திய கலாசாரத் துறையின் செயலர் உள்ளிட்ட 19 பேர் இந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.
தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் புதிய தலைவர்


  • தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையத்தின் புதிய தலைவராக, பண்டைய இந்திய வரலாற்றுக் கல்வி நிலையத்தின் தலைவர் டாக்டர் சுஷ்மிதா பாண்டே நியமிக்கப்படுகிறார்.
"குர்கான்'  நகரின் பெயர்  "குருகிராமம்' என மாற்றம்
  • ஹரியாணா மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக "குர்கான்' திகழ்ந்து வருகிறது. இங்கு பல்வேறு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன. ஹரியாணாவின் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்குகிறது. தில்லியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குர்கானின் மக்கள்தொகை சுமார் 10.7 லட்சமாகும்.
  • மகாபாரத இதிகாசத்தின் அடிப்படையில், "குர்கான்' நகரின் பெயரை "குருகிராமம்' ஆக மாற்ற ஹரியாணா மாநில அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இதில் குர்கான் பெயரை "குருகிராமம்' எனவும், மேவாட் மாவட்டத்தின் பெயரை "நூஹ்' என மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
கேரளக் கோயில் தீ விபத்தில் 106 பேர் பலி
  • கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூரில் உள்ளது 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புற்றிங்கல் தேவி கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நேரிட்ட தீ விபத்தில் சிக்கி, 106 பேர் பலியாகினர். மேலும், 383 பேர் காயமடைந்தனர்.
அதிவேக கதிமன் (GATIMAN) ரயில் சேவை தொடக்கம்
  • மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக கதிமன் ரயில்சேவை தொடங்கியது. நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை கொடியசைத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
  • நிஜாமுதீன் - ஆக்ரா கதிமன் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த செமி புல்லட் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில், டெல்லி-ஆக்ரா இடையேயான 200 கி.மீ. தொலைவை 100 நிமிடங்களில் கடக்கும்.
  • இந்த ரயிலில் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் பொருத்தப்பட்டு, இலவச இணையதள சேவை இந்த ரயிலில் வழங்கப்படும். இதன் மூலம் திரைப்படம், செய்தி, கார்ட்டூன்கள் போன்ற வசதிகளை பயணிகள் அனுபவிக்க முடியும். தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
  • 5,500 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் இந்த ரயிலை இழுத்துச் செல்லும். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் பயணிகளுக்கு தகவல் தரும் முறை, பக்கவாட்டில் திறக்கும் கதவுகள், அகன்ற ஜன்னல்கள், பயோ-டாய்லெட்டுகள், இலவச இணைய சேவை, பெட்டிகளில் சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள் என பல்வேறு அம்சங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.
‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் பிரசமர் மோடி தொடங்கி வைத்தார்
  • தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1 கோடி வரை தொழில் கடன் வழங்க வகை செய்யும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் தொடங்கிவைத்தார்.  


  • இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், பெண்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் கடன் பெறலாம். நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் வங்கிகளில் ஒரு பெண், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞர் என தலா 2 பேருக்கு தொழில் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் வேலைவாய்ப்பை தேடுவோர், வேலை வழங்குபவர்களாக மாறுவார்கள். நாட்டில் புதிதாக 2.5 கோடி தொழிலதிபர்கள் உருவாவார்கள்.
பிஹாரில் மதுவிலக்கு
  • பிஹாரில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மாநில முதல் வரும், ஐக்கிய ஜனதா தள தலை வருமான நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில் ‘மதுவிலக்கு சட்ட மசோதா 2016’ மாநில சட்டப்பேர வையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பிஹாரில் கடந்த 1-ம் தேதி முதல் கிராமப்புறங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டது. எனினும் நகர்ப்புறங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
  • இந்நிலையில் கிராமப் புறங்களில் அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பதை அடுத்து, தற்போது நகரங்களிலும் மது விற்பனைக்கு தடை செய்யும் வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நேற்று நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி உடனடியாக மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது.


ஐஐடி கல்விக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு: எஸ்.சி, எஸ்.டி.க்கு முழு கட்டண விலக்கு
  • மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பயில் வதற்கான ஆண்டு கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட (எஸ்சி), பழங்குடி யினருக்கு (எஸ்டி) முழு கட்டண விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • வரும் கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு பொருந்தும். ஏற்கெனவே ஐஐடி-களில் படித்து வரும் மாணவர்களுக்கு பொருந் தாது. அவர்கள் இப்போது நடை முறையில் உள்ள கட்டண விகி தங்களின்படி கட்டணம் செலுத்தி னால் போதும். இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.  


நடப்பு  நிகழ்வுகள்: தமிழ்நாடு
பெங்களூரில் சூறையாடப்பட்ட தமிழ் நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை
  • பெங்களூரில் சூறையாடபட்ட திருக்குறள் மன்ற தமிழ்நூலகத்தை ஆய்வு செய்த தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி, நூலகத்தைப் புதுப்பிக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்தார்.
  • பெங்களூரு, அல்சூர் பகுதியில் தாமோதர் முதலியார் தெருவில் செயல்பட்டுவந்த திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம் சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை வீதியில் வீசிச் சென்றனர். இச் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, கடும் கண்டனத்துக்கும் உள்ளானது.


பள்ளிப் பாடத்திட்டத்தில் தனிப்பாடமாக திருக்குறள்
  • பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளை தனிப் பாடமாகச் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


  • திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டு முதலே பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கட்டாய வேக கட்டுப்பாட்டு கருவி சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது
  • லாரி மற்றும் வேன்களில் ‘கட்டாயம் வேக கட்டுபாட்டு கருவியை பொருத் தும் சட்டம்’ 1.04.2016 முதல் அமலாகிறது. வாகனங்களில் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தா விட்டால் அவற்றை இயக்குவதற் கான எப்.சி (தகுதி சான்று) வழங்கப்படாது என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக்கின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வது சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் ஏற்கெனவே வேக கட்டுபாட்டு கருவிகள் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.


வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு


  • தமிழகம், புதுச்சேரி, கேரளா வில் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
  • அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஏப்ரல் 4-ம் தேதி காலை 7 மணி முதல், மே 16-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் வாக்குக் கணிப்பு (Exit Poll) நடத்துவது, வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.
  • தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த நேரத்தில் இருந்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகளை (Opinion Poll) வெளியிடுவதும் தடை செய்யப்படுகிறது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கோடைக்குள் மத்திய படை பாதுகாப்புக்கு ஏற்பாடு: அரசாணை பிறப்பிக்க உத்தரவு
  • சென்னை உயர் நீதிமன்றம் போல உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் சிஐஎஸ்எப் (CISF) பாதுகாப்பு வழங்கு வதற்கான ஏற்பாடுகளை கோடை காலத்துக்குள் முடிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கு மாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றம் போல, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் CISF பாது காப்பு வழங்குவதற்கான ஏற்பாடு களை வரும் ஏப்ரல் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறையில், தமிழக அரசு அதிகாரிகள், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல், CSIF உயரதி காரிகள் ஆலோசனை நடத்தி உரிய முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில் புற்று நோய்க்கான எச்சரிக்கை அடங்கிய புகைப்படம் 85% வரையில் பெரிதாகக்கம்
  • மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில்,‘புதிய விதிகளின் படி, சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில் புற்றுநோய்க்கான எச்சரிக்கை அடங்கிய வாசகம் 85 சதவீதம் அளவுக்கு பெரிதுபடுத்தி அச்சடிக் கப்பட்டிருக்கும். மேலும் புற்று நோய்க்கான எச்சரிக்கை வாசகமும் அதில் இடம் பெற்றிருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு பெரிதுபடுத்தப்பட்ட எச்சரிக்கை புகைப்படம் தேவையில்லாதது என்றும் 50 சதவீத அளவுக்கு அந்த புகைப்படம் இருந்தால் போதுமானது என்றும் நாடாளுமன்ற குழு தெரிவித்திருந்தது. எனினும் அந்த குழுவின் பரிந்துரையை மீறி, 85 சதவீதம் அளவுக்கு பெரிதாக் கப்பட்ட எச்சரிக்கை புகைப்படம் இனி இடம்பெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை
  • தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2015-2016 நிதியாண் டில் 36.85 மில்லியன் டன் சரக்கு கள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையானது, கடந்த நிதியாண்டில் கையாண்ட 32.41 மில்லியன் டன்களுடன் ஒப்பிடுகையில் 13.7 சதவீதம் கூடுதலாகும்.


  • 2015- 2016-ம் ஆண்டுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 36.80 மில்லியன் டன்களை விட 0.14 சதவீதம் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. 36.85 மில்லியன் டன்களை கையாண்டு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 36.80 மில்லியன் டன்களை கடந்துள்ளது.
சூரிய ஒளி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம்: ஒழுங்குமுறை ஆணையம்  அறிவிப்பு
  • தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம்  சூரியஒளி மின்சாரத்துக்கு விலையை நிர்ணயம் செய்து அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.5 முதல் ரூ.11 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • சாதாரண சூரிய ஒளியை அப்படியே பயன்படுத்தி உற்பத்தி செய்வது மற்றும் குறிப்பிட்ட நிலைக்கு மேல் வெப்பம் உண்டாக்கி மின்சாரம் உற்பத்தி செய்வது என இரண்டு விதமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே சாதாரண சூரியஒளி மூலம் உண்டாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10-க்கும், அதிக வெப்பசக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.11.12-க்கும் மின் வாரியத்துக்கு விற்பனை செய்யலாம்.
  • கடந்த மார்ச் 31-ம் தேதி வரை தமிழகத்தில் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரியஒளி மின் உற்பத்தி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, அதானி நிறுவனம் 360 மெகாவாட், சன் எடிசன் 150 மெகாவாட், வெல்ஸ்பன் 100 மெகாவாட் என இதுவரை 610 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. இதைத் தவிர, வீடுகளில் மேற்கூரைகளின் மீது சூரியஒளி மின்னுற்பத்தி தளங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நகர - கிராமப்புற மாணவர்கள் பரிமாற்றத் திட்டம்
  • மிகப்பெரிய மற்றும் பொறுப்பு மிக்க நகரப்பள்ளி மாணவர்களை கிராமப்புற பள்ளிகளுக்கும், கிராமப்புற பள்ளி மாணவர்களை நகரப் பள்ளிகளுக்கும் ஒரு வாரம் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.


  • முதல்கட்டமாக டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பங்கேற்க, கேந்திரிய வித்யாலயா சங்கதன், சிபிஎஸ்இ பள்ளிகளின் விருப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 100 நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகள் இணைக்கப்பட்டு, மாணவர்கள் பகிர்ந்து கொள்ளப்படுவர்.
  • சிறந்த கிராமப்புற பள்ளிகளை இனம்காணவும், அவற் றின் தரத்தை மேலும் உயர்த்தவும் இத்திட்டம் உதவும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாநிலங்களில் தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, குறித்த ஆய்விலும் அமைச்சகம் இறங்கியுள்ளது
100 நாள் வேலைதிட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஊதியம் உயர்வு
  • கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய கடந்த 2006-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அமல்படுத்தப் பட்டது. இத்திட்டத்தின் ஊதிய நிர்ணயம், நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக் கிறது. அதன்படி ஆண்டுதோறும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது.


  • இந்த ஆண்டுக்கான விலை நிர்ணயப்படி பல்வேறு மாநிலங் களில் ஊதியம் உயர்த்தப்பட்டுள் ளது. தமிழகத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.183-ல் இருந்து ரூ.203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா வில் ரூ.229-ல் இருந்து ரூ.240 ஆகவும் கர்நாடகாவில் ரூ.204-ல் இருந்து ரூ.224 ஆகவும் ஆந்திரா வில் 180-ல் இருந்து ரூ.194 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஹரியாணாவில் ஏற்கெனவே ரூ.251 ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.259 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஹரியாணா வில்தான் மிக அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு அடுத் தபடியாக சண்டிகரில் ரூ.248, கேரளாவில் ரூ.240 ஊதியம் அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2016-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
 மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இல்லை
  • கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படாது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் நிறைய பிரச்சினை களும், குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவர் கள் ஆன்லைனில் விண்ணப் பிப்பது சிரமம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவரவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் 06 புதிய நீதிபதிகள் முறைப் படி பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் இந்த புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உயர் நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை யின்பேரில், 6 புதிய நீதிபதிகள் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
  • இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவின் பேரில், புதிதாக நியமிக்கப்பட்ட வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல் தாஸ் ஆகியோர் நேற்று முறைப் படி உயர் நீதிமன்ற நீதிபதி களாக பொறுப்பேற்றுக் கொண் டனர்.
  • உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீந்திரன், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்த பதவிப் பிரமாணக் கடிதத்தை வாசிக்க, அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இந்த 6 நீதிபதிகளுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றபின் 6 பேரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நீதிபதிகளாக கையெழுத்திட்டனர்.
சாகர்மாலா திட்டத்தில் கப்பல், துறைமுகத் துறையில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள்


  • இந்தியாவில் உள்ள 7,500 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 14,500 கி.மீ. தூரத்துக்கு நீர் வழித் தடங்களை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.


  • சாகர்மாலா என்றழைக் கப்படும் இத்திட்டத்தின் பயனாக ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உரு வாகும் என்று மத்திய தரைவழி, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பொறுப்பேற்பு
  • அலகாபாத், டெல்லி உயர் நீதி மன்றங்களில் இருந்து மாற்றலாகி வந்துள்ள 2 நீதிபதிகள்,  நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ராஜீவ் ஷக்தேர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக  பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செல்வமகள் சேமிப்பு திட்டம் வயது வரம்பு அதிகரிப்பு
  • செல்வமகள் சேமிப்பு கணக் கில் பிறந்த குழந்தை முதல் 14 வய தான சிறுமிகள் வரை இணைய லாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.


  • அபராதக் கட்டணம், பணம் செலுத் தாமை போன்ற இக்கட்டுக்களால் வரும் விளைவுகளை தடுக்க ஆண்டு தோறும் ரூ.1000 வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும். வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2016 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்.
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள்,  ஐ.நா. சபையில் முதல் முறையாக கொண்டாட்டம்
  • அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா 14.04.2016 அன்று  முதல் முறையாக கொண்டாடப் பட்டது.
  • ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஐ.நா. வளர்ச்சி திட்ட (UNDP) தலைமை நிர்வாகி ஹெலன் கிளார்க் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் மவ் கன்டோன்மென்ட் நகரில் அம்பேத்கர் பிறந்தார்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
  • தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், திருநெல்வேலி, தூத் துக்குடி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகர் கோவில், வேலூர், திருவண்ணா மலை, திருச்சி, ஈரோடு, காஞ்சி புரம் ஆகிய 15 மாவட்டங் களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத் தப்படுகிறது.


  • தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வரும் 15 மாவட்டங்களிலும் பள்ளி செல் லாக் குழந்தைகள், மாற்றுத் திற னாளிகள், குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிய கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய அரசு மூலம் சுமார் ரூ.15 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு
  • நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
  • நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது.
  • சிபிஎஸ்இ மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (ஏஐபிஎம்டி) இந்த ஆண்டு 6,67,637 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி தேசிய நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
தமிழகத்தில் புதிதாக 2.86 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்: வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடியை தாண்டியது
  • தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடப்பதால், வாக்காளர் பட்டியலை செம்மைப் படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், மழை வெள்ளம் காரணமாக சற்று தாமதமாக ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 2 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 750 ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 93 ஆயிரத்து 349 பெண்கள், 4 ஆயிரத்து 383 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 482 வாக்காளர்கள் இருந்தனர்.





நடப்பு  நிகழ்வுகள்: விளையாட்டு
தீபா கர்மாகர்  ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில்  பங்கேற்க தகுதி
  • ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.


  • இறுதிச் சுற்றில் அவர் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தானின் ஒசனா சூசோவிடினாவை தோற்கடித்தார். தீபா தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு (The International Federation of Gymnastics) அதன் அதிகாரபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
தீபா கர்மாகரின் சாதனைகள்
  • ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற இந்தியாவிலிருந்து தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவை மீண்டும் தகுதி பெறச் செய்த தீபா கர்மாகர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.
அஸ்லான்ஷா கோப்பையை ஆஸ்திரெலியாவென்றது
  • மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்ற அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு சரத் கமல், மவுமாதாஸ் தகுதி
  • ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆசிய தகுதி போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்,மகளிர் பிரிவில் இந்தியாவின் மவுமா தாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி  பெற்றனர். ஏற்கெனவே இந்தியாவை சேர்ந்த மனிகா பத்ரா, சவுமியாஜித் கோஸ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  
T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்
  • டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அந்த அணி இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேற்கிந்திய தீவுகள் அணி டி 20 உலகக் கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
T-20 உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன்
  • மகளிர் T-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய மகளிரணி களமிறங்கியது.
உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி தீபிகா குமாரி தோல்வி
  • சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ரியோ ஒலிம்பிக்  போட்டி: சவாலான பிரிவில் இந்திய ஹாக்கி அணி
  • ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஹாக்கி விளையாட்டுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கவுள்ள 12 அணிகளும் "ஏ', "பி' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி இந்திய அணி இடம்பெற்றுள்ள "பி' பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி, ஐரோப்பிய சாம்பியனான நெதர்லாந்து, பான் அமெரிக்க சாம்பியனான ஆர்ஜென்டீனா ஆகிய முன்னணி அணிகளும் இடம்பெற்றுள்ளன. எனவே வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதுதவிர அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளும் "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளன.


ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது
  • ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாக கருதப்படும் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரத்தில் நேற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான அப்பல்லோ கடவுளின் ஆலயத்தில் நடிகர், நடிகைகள் பழங்கால கிரேக் கர்களைப் போல உடையணிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


  • கிரேக்க நடிகை கேத்ரினா, பூசாரி வேடமணிந்த நிலையில் தீபத்தை ஏற்றினார். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை உணர்த்தும் விதமாக ஒலிம்பியாவில் இந்த ஜோதி ஏற்றப்பட்டுள்ளது.
  • தீபம் ஏற்றப்பட்டதும் ஆலிவ் இலையுடன் பாடல்கள் பாடியபடி நடந்து வந்து கிரீஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் எலப்தேரியஸ் பெட்ரோனியஸிடம் தீபத்தை வழங்கினார். ஒலிம்பிக் தீபத்தை பெற்ற அவர் தீப தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த தீபம் 329 நகரகங்கள் வழியாக பயணம் செய்து மே 3-ம் தேதி பிரேசில் நாட்டை சென்றடையும்.
  • முடிவாக ரியோ டி ஜெனிரோவில் உள்ள போட்டி நடைபெறும் மாராக்காணா மைதானத்தில் இந்த தீபம் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாஹ், பிரேசில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கார்லோஸ் நுஸ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.


0 comments:

Post a Comment

Links